கொழும்பு: பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியா இனி இலங்கைக்கு நிதி உதவி அளிக்காது என செய்தி வெளியானதை அடுத்து, இலங்கைக்கான இந்திய தூதரகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து இந்திய தூதரக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இந்தியா இனி இலங்கைக்கு நிதி உதவி அளிக்காது என செய்தி வெளியாகி இருப்பதைப் பார்த்தோம். அதற்கு பதில் அளிக்க விரும்புகிறோம்.

இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு (அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.3,189 கோடி) உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

அதுமட்டுமின்றி, இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் இலங்கை கடனுதவி பெறவும் இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே அலுவலர் மட்டத்தில் உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக அனைத்து வகைகளிலும் இந்தியா உதவி வருகிறது. குறிப்பாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முக்கிய பொருளாதார துறைகளில் நீண்டகால முதலீடுகளை இந்தியா ஊக்குவித்து வருகிறது. இவை மட்டுமின்றி, இரு தரப்பு வளர்ச்சிக்கான திட்டங்களை இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இவற்றின் மொத்த மதிப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்.

இந்தியாவின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களில் இலங்கை மாணவர்கள் உயர் கல்வியையும் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகளையும் பெற்று வருகின்றனர். இலங்கையுடனான நெருங்கிய மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு காரணமாக இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் இலங்கை பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள இந்தியா உதவி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *