“நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் இருக்கிறது’’ என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட `நீதிமன்ற அவமதிப்பு’ என்னும் அதிகாரம், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்கிற அச்சுறுத்தலை உருவாக்குவதாக இருக்கிறது.
நீதியையும் நேர்மையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிறபோதும் விமர்சனங்களிலிருந்து நீதிமன்றங்களும், நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா என்கிற கேள்வி எழுகிறது. சந்தேகங்களுக்கு இடமளிக்காதவர்கள்தான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க முடியும். நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் இது பொருந்தும்தானே. ஆனால், கருத்து சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயும் என நீதிபதிகள் வரிந்துகட்டுகின்றனர்.

அந்த வகையில்தான் சமூக ஊடகச் செயற்பாட்டாளர் சவுக்கு சங்கர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த சட்டப்பிரிவை நீக்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதற்காக, கடந்த ஆண்டு மக்களவையில் தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறோம் என்பதை தமிழ்நாடு அரசின் கவனத்துக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரண்டு நீதிபதிகள்கொண்ட அமர்வு சவுக்கு சங்கருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. இந்த தண்டனை இயற்கை நீதிக்கு எதிரானது. பொதுவாக ஒரு வழக்கில் வாதி-பிரதிவாதி என இரண்டு தரப்பு இருக்கும். இரண்டு வாதங்களையும் கேட்டு தீர்ப்பளிக்கும் இடத்தில் நீதிபதி இருப்பார். ஆனால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் நீதிபதியே தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருக்கிறார். எனவேதான் இதை இயற்கை நீதிக்கு முரணானதாக இருக்கிறது என்கிறோம்.

வளர்ந்த நாடுகள் பெரும்பாலானவற்றில் நீதிமன்ற அவமதிப்பு என்னும் பிரிவே சட்டத்தில் இல்லை. பொதுவாக நீதிபதிகள் ஒரு வழக்கில் தாங்கள் மறைமுகமாகத் தொடர்பு கொண்டிருந்தால்கூட அந்த வழக்கை விசாரிக்காமல் விலகிக்கொள்வது வழக்கம். ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களே வழக்கை விசாரித்து தண்டனையும் அளித்திருக்கிறார். இது சட்டப்படி முறையானது அல்ல என்று பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1971-ம் வருடத்தில் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் அதிகபட்ச தண்டனை ஆறு மாத சிறைதான். இந்த வழக்கில் அந்த அதிகபட்ச தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளனர். இது நீதி வழங்குவது என இல்லாமல் பழிவாங்குவதாக இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர் மன்னிப்புக் கேட்கவில்லை என்ற காரணத்தைக் கூறித்தான் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. நீதிபதி பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடாது. கருணையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது. மக்களின் இந்த மனநிலையைப் புரிந்துகொண்டு இந்த தண்டனையை ரத்துசெய்ய மாண்புமிகு நீதிபதிகள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.