திருமங்கலம்: பரிகாரம் செய்வதாக கூறி தங்கமோதிரத்தை உருக்கி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆறுமுகம் வடக்கு இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சுபாஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது தந்தை மாசானம் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பகுதிக்கு குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் ஒரு வாலிபர் வந்தார். இவர் சுபாஷின் வீட்டின் முன்பு நின்று கொண்டு, ‘‘இந்த வீட்டில் இறந்துபோனவரின் ஆவி வீட்டுவாசலில் நின்று அழுது கொண்டிருக்கிறது. அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும்’’ என கூறிவிட்டு சென்றார்.

மீண்டும் நேற்று காலை வந்த அந்த வாலிபர், வீட்டிலுள்ள சுபாஷ் மற்றும் அவரது தாயாரிடம் இரவில் கூறிய விஷயங்களை தெரிவித்து, பரிகாரம் செய்தால் நல்லது என கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய சுபாஷ் குடும்பத்தினர் அந்த வாலிபரை வீட்டிற்குள் அழைத்து சென்று பரிகாரம் செய்தனர். பரிகாரம் செய்த வாலிபர் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதற்குள் சில தகடுகளை போட்டார். பின்னர் சுபாஷின் கையில் ஒரு தகடு மற்றும் விபூதியை வைத்து கதகதப்பாக இருந்த தண்ணீருக்குள் மீண்டும் மீண்டும் அழுத்தி எடுத்தார்.

சிறிது நேரத்தில் பரிகாரம் செய்து முடிக்கப்பட்டது. பரிகாரத்திற்குரிய பணம் வீட்டில் இல்லாததால் சுபாஷ் ஏடிஎம்மில் எடுக்க சென்றார். ஏடிஎம் மையத்தில் தனது கையில் ஒட்டியிருந்த விபூதியை துடைத்த போதுதான் சுபாஷ் அதிர்ச்சியடைந்தார். அவரது கையில் போட்டிருந்த தங்கமோதிரம் வெள்ளைநிறத்தில் காட்சியளித்தது. சந்தேகமடைந்த சுபாஷ், திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பரிகாரம் செய்த வாலிபரை பிடித்து ‘தங்கள் பாணியில்’ விசாரணை நடத்தினர். இதில், அவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த முத்துமணி (27) என்பதும், பரிகாரம் செய்வதாக கூறி தங்கத்தை உருக்கி எடுத்ததும், இதேபோல் மேலும் பலரிடம் ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: