Loading

புதுடில்லி, :நடிகர் ரஜினி மனைவி மீதான 6 கோடி ரூபாய் மோசடி வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.நடிகர் ரஜினி நடித்த கோச்சடையான் படம் 2014ல் வெளியானது. இதை, ‘மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் முரளி என்பவர் தயாரித்தார். இதற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நகாவர் என்பவரிடம் 6.2 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

ஆனால், அந்தப் பணத்தை திருப்பித் தரவில்லை. இதையடுத்து, 2015-ல் ரஜினி மனைவி லதா மீது, பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில், அபிர்சந்த் நகாவர் முறையிட்டார்.இதைத் தொடர்ந்து, லதா மீது கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.தன் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லதா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 ஆகிய பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. ‘எனவே அவர் மீதான வழக்கில் இருந்து மூன்று பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

இருப்பினும் அவர் மீதான இந்திய தண்டனை சட்டம் 463 பிரிவின்படி, ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்ததற்காக கீழமை நீதிமன்றம் விசாரணை நடத்தலாம்’ என உத்தரவிட்டது.கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் லதா மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. லதா மீதான பண மோசடி வழக்கில், கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், கர்நாடகா அரசு மற்றும் எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *