தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமைக்கு ராஜினாமா கடிதம் கொடுத்ததாக பேசப்பட்டு வந்த நிலையில், அதனை உண்மையென நிரூபிக்கும் வகையில் அவர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

திமுக ஆலோசனைக் கூட்டம்

சுப்புலட்சுமி ஜெகதீசனின் விலகல் அறிக்கை… பின்னணி என்ன?

தி.மு.க நிகழ்ச்சிகளில் தலைவருக்கு நிகராக மேடையில் அமரும் பதவியான துணைப் பொதுச்செயலாளர் பதவியில் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் இருந்துவருகிறார்கள். முக்கிய பதவியில் இருந்தும் தற்போது பதவியை ராஜினாமா செய்தது ஏன்?

இதுகுறித்து, அறிவாலய நிர்வாகிகள் மத்தியில் விசாரித்தோம். “சமூக ரீதியாக, அவர் சார்ந்த சமூகம் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க பக்கம் நிற்பதால், அச்சமூக நிர்வாகிகளுக்குத் தி.மு.க-வில் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அரிதாக சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதோடு, 2021 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் சீட்டும் கொடுத்தது கட்சித் தலைமை.

2021 சட்டமன்றத் தேர்தலில் சுப்புலட்சுமி சுத்தமாக தேர்தல் வேலையே பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. எதிர்த்து நிற்பது பா.ஜ.க-தானே என்பதாக அசால்டாக இருந்துவிட்டார் என்பது கட்சிக்காரர்கள் குற்றச்சாட்டு. ஜெயித்தால் சபாநாயகர் பதவி கிடைக்கும் என்று சுற்றிக்கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக பா.ஜ.க வேட்பாளர் சரஸ்வதி வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாகிவிட்டார்.

சரஸ்வதி, பாஜக எம்.எல்.ஏ

இந்த நிலையில், சுப்புலட்சுமியின் தோல்விக்கு அமைச்சர் முத்துசாமிதான் காரணம் என்பதாக, சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் அப்போதே கொளுத்திப்போட்டார்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை நிர்வாகிகள், தொண்டர்கள் என எவரும் சுப்புலட்சுமி தொடர்புகொள்வதில்லை.

இந்தச் சூழலில், உள்ளாட்சித் தேர்தலில் தலைமை அவரைக் கண்டுகொள்லவில்லை என்கிற மனக்கசப்பில் அவரின் கணவர் ஜெகதீசனை வைத்து முகநூலில் தி.மு.க-வுக்கு எதிரான சிலப் பதிவுகளை வெளியிடச் செய்திருக்கிறார் சுப்புலட்சுமி என்கிறார்கள். வெளிப்படையாக இப்படிச் செய்வதால், கட்சித் தலைமை தன்னை அழைத்துப் பேசும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், அதுபற்றி தலைமை கண்டுகொள்ளவே இல்லையாம்.

முப்பெரும் விழா

ஒட்டுமொத்தமாக தன்னைப் புறக்கணிப்பதாக நினைத்த சுப்புலட்சுமி, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் ஈரோடுக்குச் சென்றிருந்தபோது, அவரை நேரில் சந்தித்து, ராஜினாமா கடிதத்தை அப்போதே கொடுத்துவிட்டார். அதனால்தான், செப்டம்பர் 15-ம் தேதி விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில்கூட சுப்புலட்சுமி பங்கேற்கவில்லை. மேடையில் அமரும் பொறுப்பைக் கொண்ட ஒரே பெண் சுப்புலட்சுமிதான் என்பதால், முப்பெரும் விழாவில் ஒரு பெண்கூட இல்லாமல், முழுக்க ஆண்களே மேடையை ஆக்கிரமித்திருந்தனர்.” என்றனர்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் தரப்பில் பேசியபோது, “கட்சிப் பொறுப்பு முக்கியமானதாக இருந்தபோதிலும், கட்சியினர் எவரும் சுப்புலட்சுமியை மதிப்பதில்லை. சட்டமன்றத் தேர்தலில் வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில்தான் பா.ஜ.க வேட்பாளர் சரஸ்வதியிடம் வீழ்ந்தார் சுப்புலட்சுமி. ஒருவேளை வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆகிவிட்டால் சுப்புலட்சுமி அமைச்சராகிவிடுவார் என்று தற்போதைய அமைச்சர் ஒருவர் அச்சம்கொண்டிருந்தார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன்

அதன்காரணமாகத்தான், கட்சி நிர்வாகிகளை சுப்புலட்சுமிக்காகத் தேர்தல் பணிகளைச் செய்யவிடவில்லை அவர். தி.மு.க-வினரின் ஒத்துழைப்பின்றியே வெற்றியின் அருகில் சென்றுவிட்டார். ஒருவேளை நிர்வாகிகள் இறங்கி வேலைப்பார்த்திருந்தால், கண்டிப்பாக ஜெயித்திருப்பார்.

தேர்தலில் தோற்ற ஆதங்கம் சுப்புலட்சுமிக்கும், அவரின் கணவர் ஜெகதீசனுக்கும் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் நடந்துமுடிந்த ஒன்றியச் செயலாளர் தேர்தலில், ஈரோடு மாவட்டத்திலுள்ள இரண்டு ஒன்றியச் செயலாளர்களை மாற்ற வேண்டும் என்று சுப்புலட்சுமி கோரிக்கை விடுத்தார். தனது தேர்தல் தோல்விக்குக் காரணமான அந்த இருவருக்குப் பதில் வேறு நபர்களையும் ரெக்கமெண்ட் செய்திருந்தார் சுப்புலட்சுமி. ஆனால், அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. மனைவியின் ஆற்றாமையைக்கண்டுதான் கணவர் ஜெகதீசன் முகநூலில் தி.மு.க-வை விமர்சிக்கும் வகையில் எழுதினார்” என்கிறார்கள்.

ராஜினாமா குறித்து உண்மை நிலவரம் அறிய, சுப்புலட்சுமியைப் முன்னர் பலமுறைத் தொடர்புகொண்டும் போனை எடுக்கவில்லை. இரண்டுமுறை வாட்ஸ்அப் கால் செய்தபோது, போனை எடுத்தவரிடம் ‘ராஜினாமா செய்ததாகத் தகவல் வருகிறது, உண்மைதானா?’ என்று நாம் கேட்க, “அதை நீங்கதான் கண்டுபிடிக்கனும்!” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் சுப்புலட்சுமி.

இந்த நிலையில் தான் இன்று விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் சுப்புலட்சுமி. அதில், “2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின், அவரின் விருப்பத்தின்படி தளபதி அவர்களை முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.”

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசு பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அன்று பதவியில் இருந்தும் கட்சியிலிருந்து விலகுவதாக, எனது விலகல் கடிதத்தை, தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பி விட்டேன்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.