காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. செப்டம்பர் 24-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவிருப்பதால், யார் யார் போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், கட்சித் தலைமைமீது அதிருப்தியிலிருக்கும் ஜி-23 குழுவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து சசி தரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தது காங்கிரஸ் கட்சி. அந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. தொடர்ந்து, காங்கிரஸின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார் சோனியா காந்தி. 2020-ம் ஆண்டு, கட்சித் தலைமைமீது அதிருப்தியிலிருக்கும் 23 தலைவர்கள் ஒன்றுகூடி ஜி-23 என்ற குழுவை உருவாக்கினர். கபில் சிபல், குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்டோர் அடங்கிய இந்தக் குழு, `கட்சிக்கு முழு நேரத் தலைவர் வேண்டும். உட்கட்சித் தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன்வைத்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். தொடர்ச்சியாக, காந்தி குடும்பத்துக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளை ஜி-23 குழுவிலுள்ள தலைவர்கள் பதிவுசெய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சில ஜி-23 தலைவர்கள் கட்சியிலிருந்தும் விலகினர். சமீபத்தில், கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகினார்.

சசி தரூர்

சசி தரூர்

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவி உட்பட மற்ற பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதுமிருக்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மண்டலவாரியாக, `ராகுல் காந்திதான் காங்கிரஸ் தலைவராக வேண்டும்’ எனத் தீர்மானங்கள் நிறைவேற்றிவருகின்றன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் இதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றன. ஆனால், ராகுல் காந்தி அதற்குத் தயாராக இல்லை என்ற செய்திகளும் சொல்லப்படுகின்றன. `நான் கட்சிக்காகக் களத்தில் இறங்கி வேலை செய்கிறேன். பிரசாரத்தில் கலந்துகொள்கிறேன். ஆனால், தலைவர் பதவி மட்டும் வேண்டாம்’ என்ற முடிவில் ராகுல் காந்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *