ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாள்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன என்ற குற்றச்சட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதிக விலைக்குக் கட்டணத்தை உயர்த்தும் பேருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பேருந்து நிறுவனமும் பொருட்படுத்துவதே கிடையாது என்பதுதான் உண்மை. பண்டிகை நாள்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாள்களாக இருந்தாலும், வார இறுதி நாள்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர்கதையாகவே இருக்கிறது. இது குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை நேரடியாகவும், சமூகவலைத்தளங்கள் மூலகமாக எதிர்ப்பு தெரிவித்தாலும் அன்றைய நாளோடு மட்டும் பேசு பொருளாகி, அடுத்த கட்டண உயர்வின்போதுதன் மீண்டும் விவாதமாகிறது. இதற்கு ஒரு நிரந்திர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. காரணம் பலரின் மாத வருமானம் வாடகை உள்பட இதர செலவுகளோடு, இரு முறை தங்களது சொந்த ஊருக்கு சென்று வந்தாலே முடிந்துவிடுகிறது என்கிற புலம்பல்கள்தான் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறைகள் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் வர இருப்பதால் மீண்டும் பேசு பொருளாக மாறியிருக்கிறது ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள். இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கரை தொடர்பு கொண்டோம். “சிறிய அளவில் உள்ள பிரச்னையை பூதாகரமாக மாற்றி கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இது போல் போன முறையும் புகார்கள் வந்த போது 957 வண்டிகள் பரிசோதனை செய்து, அந்த அறிக்கையும் கொடுத்தோம். அதில் பயணம் செய்த 4,500 பேரிடம் ‘எவ்வளவு கூடுதல் கட்டணம் கொடுத்தீர்கள். அதை வாங்கி கொடுத்துவிடுகிறோம்’னு கேட்ட போது வெறும் 97 பேர்தான் புகார் செய்ய முன் வந்தார்கள். ஏனெனில் ஆம்னி பேருந்துகளில் சென்றால் கூடுதல் கட்டணம் இருக்கும் என முடிவெடுத்து தெரிந்தேதான் பயணிக்கிறார்கள்.

எஸ்.எஸ்.சிவசங்கர்

பேருந்துகள் பொறுத்தவரை ஸ்டேஜ் கேரியர், கான்ட்ரேக்ட் கேரியர் என்கிற விதிமுறைபடி இயங்கி கொண்டிருக்கின்றன. இதில் அரசு பேருந்துகளும் சரி, தனியார் பேருந்துகளும் சரி ஸ்டேஜ் கேரியரில் இயங்கும் போது நிர்ணயித்த கட்டணத்தில் தான் இயக்கப்படும். இதில் ஏதும் மாற்றி இயக்கினால் அரசு விதிமுறைகளுக்கு எதிராக இயக்குகிறார்கள் என்று அர்த்தம். அடுத்து ஆம்னி பேருந்துகள் எல்லாம் கான்ட்ரேக்ட் கேரியரில்தான் இயக்கப்படுகிறது. அதில் பயண பேருந்துகளாகவும், வெப்சைட்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்த வாகனங்களில் இவ்வளவு விலைக்கு போக போகிறோம் என ஒப்பு கொண்டுதான் பயணிக்கிறார்கள். யாரும் கட்டாயப்படுத்தி வண்டியில் ஏறி உட்கார்ந்த பிறகு வசூல் செய்வதில்லை. இதுதான் நடைமுறை.

எனவே ஆன்லைன்களில் தெரிந்த பிறகும் டிக்கெட் எடுக்கிறார்கள் என்பதுதானே பிரச்னையே. ஒவ்வொரு முறையும் தணிக்கை செய்து கூடுதல் கட்டணம் வசூல் செய்ததை நானே போய் வாங்கி கொடுத்திருக்கிறேன். 957 பேருந்துகளில் புகார் செய்த 97 பேருக்கான தொகையும் வாங்கி கொடுத்திருக்கிறோம். 11 லட்சம் அபராதமும் விதித்து வசூலித்துள்ளோம். இப்போதும் ஆம்னி பேருந்துகள் மீது சட்டத்திற்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம், என்ன செய்யலாம் என்பதையும் ஆலோசித்து கொண்டிருக்கிறோம். விரைவில் ஆம்னி பேருந்து சங்கங்களிடமும் பேசி முறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளும் எடுத்து வருகிறோம்” என்கிறவர், “அரசு பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் போய் வருகிறார்கள். அதில் எந்த பிரச்சினையும் இல்லை” என்கிறார்.

“எஸ்.சி.டி.சி- ல் எல்லா விதமான வசதிகளுடன் நீண்ட தூர பயணத்திற்கான ஏசி பேருந்துகளும் இருக்கிறது. அதிலும் ரிசர்வேஷன் வசதிகளும் உள்ளன. ஏழை எளிய மக்களுக்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை அரசாங்கம் கொடுத்துக் கொண்டுத்தான் வருகிறது. எனவே கொடுக்கும் சேவையில் எந்த குறைவும் இல்லை. அவரவர் தனிப்பட்ட விருப்பத்திற்கு தேர்வு செய்து போகிறார்கள்” என்கிறார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

ஆம்னி பஸ்

ஆம்னி பஸ் உரிமையாளர்களோ, “பஸ் புக்கிங்கில் இடைதரகர்களை வைக்காதீர்கள் என்று காவல்துறை, ஆர்.டி.ஓ. கமிஷனர் என பல முறை புகார் அளித்திருக்கிறோம். ஆனால், அந்த இடைத்தரகர்களை வாழ வைப்பதன் மூலம் தங்களுக்கும் ஆதாயம் இருக்கும் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இது அரசுக்கு நல்லாவே தெரியும். ‘ஒரு சில தனியார் செயலிகள்’ மூலம், ‘ஆன்லைனில் அதிகமான கட்டணத்தை அனுமதிக்கிறார்கள்’ என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து, காவல் நிலையத்தில் உட்காரவும் வைத்தோம். ஆனால், ‘காம்படீசன் கண்ட்ரோல் ஆஃப் இந்தியா’ பிரகரம், எங்களால் விலையை கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லி வழக்கறிஞர்கள் வந்து அழைத்து சென்றுவிட்டார்கள். இங்கே பஸ்காரங்க எல்லாம் வருஷம் பூரா உழைச்சு உழைச்சு நொந்து போய் தொழில் பண்ணிட்டு இருக்கிறோம். ஏதோ ஒரு சிலர் அதிக விலைக்கு டிக்கெட் போட்டு, எல்லோரையும் நோகடிக்கிறாங்க. விலை ஏற்றியவர்கள் யார் என்பதும், எந்த நிறுவனம், எத்தனை மணிக்கு வண்டி எடுக்குறாங்க, நம்பர் என்ன? என எல்லா விவரமும் முழுமையாக தெரியும். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஆம்னி சங்கத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லையே? கூடவே நின்று பிடித்தும் கொடுக்கிறோம். அப்படி இருந்தும் அரசுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே! இன்று சில கட்சிகளின் கட்டுப்பாட்டில்தான் பல இடைத்தரகர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை அரசும் கண்டும் காணாமல் இருக்கிறது. எனவே மோசடி செய்பவர்களை புறக்கணித்து மக்கள்தான் இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்” என்கிறார்கள்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *