திருவனந்தபுரம்: கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தரை மறு நியமனம் செய்ய முதல்வர் பினராய் விஜயன் சட்டத்தை மீறி நேரடியாக தன்னை தொடர்பு கொண்டார் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கவர்னர், முதல்வர் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. முதல்வர் பினராய் விஜயன் கடந்த சில தினங்களுக்கு  முன் கவர்னரை கடுமையாக தாக்கிப் பேசினார். இந்நிலையில்  கவர்னர் ஆரிப் முகம்மது கான் திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தை கூட்டினார்.

ஒரு கவர்னர் மாநில அரசுக்கு எதிராக பத்திரிகையாளர்களை சந்திப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இதில் கவர்னர் ஆரிப் கூறியதாவது: கண்ணூரில் சரித்திர மாநாடு நடைபெறும் போது என்னைத் தாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் வந்தனர். அவர்கள் ரகளையில் ஈடுபடும்போது மேடையில் இருந்த அப்போதைய எம்பியும், இப்போதைய முதல்வர் பினராய் விஜயனின் தனி உதவியாளருமான ராகேஷ் மேடையிலிருந்து இறங்கிச் சென்று ரகளையில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தார்.

இதனால்தான் ராகேஷுக்கு தற்போது உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கண்ணூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்தை மீறி துணைவேந்தரை மறு நியமனம் செய்வதற்கு முதல்வர் பினராய் விஜயன் நேரடியாக என்னை அணுகினார். அவர் தன்னுடைய ஊரைச் சார்ந்தவர் என்றும், எனவே மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என்றும் என்னிடம் அவர் கூறினார். பல்கலைக்கழக நியமனங்களில் சட்டத்தை மீறி எதுவும் நடைபெறாது என்று எழுத்து மூலம் பினராய் விஜயன் என்னிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின் விதிமுறைகளை மீறி பல நியமனங்கள் நடந்தன.

இதனால்தான் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை நான் எதிர்த்தேன். கேரளாவில் உள்ள ஒரு எம்எல்ஏ நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார். இன்னொரு எம்எல்ஏ அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுகிறார். இங்குள்ள அரசு மாநிலத்தின் வளர்ச்சி குறித்து கவலைப்படுவதில்லை. தங்களை எதிர்ப்பவர்களை அடக்கி அவர்களது வாயை மூடவே விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். கேரள அரசுக்கும், முதல்வர் பினராய் விஜயனுக்கும் எதிராக கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியுள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.