Loading

மொகாலி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு ஒத்திகையாக அமைந்துள்ள இந்த தொடர், உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் போட்டி மொகாலியில் இன்று இரவு நடைபெறுகிறது. ஆசிய கோப்பை தொடரில் அடைந்த அதிர்ச்சி தோல்விகளில் இருந்து மீள்வதுடன், உலக கோப்பைக்கு முன்பாக கணிசமான வெற்றிகளைக் குவித்து தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துடன் ரோகித் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது பந்துவீச்சு பலத்தை அதிகரித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதம் விளாசிய கோஹ்லி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு எதிராகவும் ரன் குவிப்பை தொடர்வார் என எதிர்பார்க்கலாம். ரோகித், ராகுல், சூரியகுமார், பன்ட், கார்த்திக், ஹர்திக், ஹூடா என அதிரடிக்கு பஞ்சமில்லாத பேட்டிங் வரிசை இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். காயம் காரணமாக ஜடேஜா விலகியது சற்று பின்னடைவை கொடுத்துள்ள நிலையில்… நடுவரிசையில் யாரை களமிறக்குவது, 6வது பந்துவீச்சாளர் யார் போன்ற கேள்விகளுக்கு விடை காண இந்த தொடரை இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளும்.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் உலக கோப்பைக்கு முழுவீச்சில் தயாராகும் முனைப்புடன் இந்த தொடரில் களமிறங்குகிறது.
அந்த அணியும் வித்தியாசமான வியூகங்களை முயற்சிக்கலாம். இரு அணிகளுமே வெற்றியை குறிவைத்து வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யஜ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் அபாட், ஆஷ்டன் ஏகார், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேடு, ஆடம் ஸம்பா.

இந்தியா ஆதிக்கம்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 23 சர்வதேச டி20 மோதியுள்ளதில், இந்தியா 13 வெற்றிகளை குவித்துள்ளது. ஆஸ்திரேலியா 9 போட்டியில் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை.

* கடைசியாக மோதிய 6 டி20ல் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளுடன் சமநிலை வகிக்கின்றன.

* இரு அணிகளும் சிட்னியில் கடைசியாக விளையாடிய போட்டியில் (2020, டிச. 8), கோஹ்லி 85 ரன் (61 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ஆனாலும், அந்த போட்டியில் இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

* மெல்போர்னில் நடந்த டி20ல் (2008, பிப். 1) இந்திய அணி 74 ரன்னுக்கு சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. ராஜ்கோட்டில் (2013) இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு குவித்த 202 ரன் அதிகபட்சமாகும் (இந்த போட்டியில் ஆஸி. ஸ்கோர்: 201/7).

* ஆஸி.க்கு எதிராக கோஹ்லி 18 இன்னிங்சில் 718 ரன் குவித்து (சராசரி 59.83, அரை சதம் 7) முன்னிலை வகிக்கிறார். ஆஸி. தரப்பில் ஆரோன் பிஞ்ச் 15 இன்னிங்சில் 440 ரன் (சராசரி 29.33, அரை சதம் 2) எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

* விக்கெட் வேட்டையில் பும்ரா 11 போட்டியில் 15 விக்கெட் கைப்பற்றி முன்னிலையில் உள்ளார். ஆஸி. வேகம் வாட்சன் 8 போட்டியில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *