புதுடில்லி, தலைநகர் புதுடில்லியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 123 அரசு சொத்துக்களை, வக்பு வாரியத்துக்கு, முந்தைய காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாரைவார்த்த விவகாரம், தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 2014 லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முந்தைய நாள், அவசர கதியில் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் தமிழகத்தின் திருச்சி அருகே, ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஏழு கிராமங்கள், பழமையான கோவில் உள்ளிட்டவை, தங்களுக்கு சொந்தமானவை என, வக்பு வாரியம் தெரிவித்திருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தலைநகர் புதுடில்லியிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி, தற்போது அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் 2004 — 14 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது.

அப்போது புதுடில்லியில் அதிக விலை மதிப்புள்ள, அரசுக்கு சொந்தமான 123 சொத்துக்கள், வக்பு வாரியத்துக்கு அவசர கதியில் அளிக்கப்பட்டுள்ளன. கன்னாட் பிளேஸ், மதுரா ரோடு, லோகி ரோடு, மான்சிங் ரோடு, அசோகா ரோடு, ஜன்பத், பார்லிமென்ட் ஹவுஸ், கரோல் பாக், சதார் பஜார், சாணக்கியா புரி உள்ளிட்ட இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன.இவற்றின் சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2014 லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்த நடவடிக்கை அவசரம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முடிவை அப்போதைய மத்திய அமைச்சரவை எடுத்து, ரகசிய குறிப்பு வாயிலாக இந்த நடவடிக்கைகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், மத்திய நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் மற்றும் டி.டி.ஏ., எனப்படும் டில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின்கட்டுப்பாட்டில் டில்லியில் உள்ள 123 சொத்துக்களின் உரிமையை டில்லி வக்பு வாரியத்திற்கு மாற்றுவது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடில்லி வக்பு வாரியம் 2014 பிப்., 27ல், அந்த 123 சொத்துக்களும் தங்களுக்கு சொந்தமானது என, உரிமை கோரி அறிக்கை அனுப்பிய ஒரு வாரத்துக்குள், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்கள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. மேலும், அந்த நிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை என்பதால், அந்த சொத்துக்களின் மீதான உரிமையை கைவிடுவதாகவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த காங்கிரசின் சல்மான் குர்ஷித், இந்த ஒட்டு மொத்த நடவடிக்கைகளுக்கும் பின்னணியாக இருந்து செயல்பட்டுள்ளார். இதற்கு பின் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும், சொத்துக்களை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வி.எச்.பி., அமைப்பு சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த சொத்துக்கள் சுதந்திரத்துக்கு முந்தைய பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பரம்பரையாக வந்தவை என வக்பு வாரியம் தரப்பில் கூறப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இந்த சொத்துக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் 2016ல் இது குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில் எந்தவிதமான உறுதியான முடிவும் தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக, இந்த சொத்துக்கள் புதுடில்லி வக்பு வாரியத்துக்கு சொந்தமானவையா என்பது குறித்து இந்த குழு எதுவும் தெரிவிக்கவில்லை. வக்பு வாரியம் தரப்பில் இது குறித்து கூறுகையில், ‘இந்த சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருவாய், முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றால் எங்களுக்கு வருவாய் கிடைக்காது. எங்கள் சமூகத்தின் மேம்பாடும் பாதிக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2014ல் பா.ஜ., அரசு மத்தியில் பதவியேற்றதும், நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு இது குறித்து கூறியதாவது:கடந்த ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த சல்மான் குர்ஷித், ஓட்டு வங்கி அரசியலை கருத்தில் வைத்து, இந்த சொத்துக்களை வக்பு வாரியத்துக்கு மாற்றியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.ஓட்டு வங்கி அரசியலுக்காக, இதுபோன்ற அரசுக்கு சொந்தமான எத்தனை, எத்தனை நிலங்கள், சொத்துக்கள் மத அமைப்புகளுக்கு தாரைவார்க்கப்பட்டன என தெரியவில்லை என்பது தான், சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.