புதுச்சேரி புஸ்சி வீதி – செஞ்சி சாலை சந்திப்பில் சுப்ரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டடம் பழுதடைந்து, மேல்தள காரைகள் இடிந்து விழுந்தது.

பள்ளிகள் ஒருங்கிணைப்பு

அதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இப்பள்ளியில் படிக்கும் 550 மாணவிகளும், குருசுக்குப்பம் என்.கே.சி., மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர்.அப்பள்ளியில் உள்ள 130 மாணவிகளுடன் ஒருங்கிணைத்து, கடந்த வாரம் முதல் வகுப்பு நடத்தப்பட்டு வந்தது.

ஆசிரியர்கள் இடமாற்றம்

இரு பள்ளிகளும் இணைக்கப்பட்டதால் கூடுதலாக இருந்த ஆசிரியர்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து இரு பள்ளி மாணவிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மாணவிகள் போராட்டம்

இரு பள்ளிகளை ஒருங்கிணைத்ததால் இடப்பற்றாக்குறை உள்ளது; போதிய கழிவறை வசதி இல்லை; ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது; சுப்ரமணிய பாரதியார் பள்ளி ஆசிரியர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுகின்றனர் என கூறி, குருசுக்குப்பம் பள்ளி மாணவிகள் கடந்த 15ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை கல்வித் துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். இருப்பினும், இரு பள்ளி மாணவிகளுக்கிடையே கருத்து முரண்பாடு நிலவியது.

மாணவிகள் மோதல்

இந்த நிலையில், நேற்று காலை 8:00 மணிக்கு வழக்கம் போல் மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இரு பள்ளி மாணவிகள் இடையே முன் விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.அப்போது சுப்ரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளின் பெற்றோர் சிலர், என்.கே.சி., பள்ளி மாணவியை தாக்கினர்.இதனைக் கண்டித்து என்.கே.சி., பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.

அதிகாரிகள் சமரசம்

தகவலறிந்த கல்வித் துறை இணை இயக்குநர் சிவகாமி, எஸ்.பி., வம்சித ரெட்டி, முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவிகள் மற்றும் பெற்றோர்களை சமாதானப்படுத்தினர். பெற்றோர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றினர்.

அமைச்சர் விசாரணை

சம்பவ இடத்திற்கு வந்த தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரச்சனை தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.அப்போது, அவர், பள்ளிக் கட்டடம் இல்லாததால் தற்காலிகமாக வெளியில் இருந்து பள்ளி மாணவிகள் வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தேவையின்றி ஆசிரியர்கள், மாணவிகள் பிரச்னை செய்யக் கூடாது என எச்சரித்தார்.

விடுமுறை அறிவிப்பு

தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் இருந்ததால், இரண்டு பள்ளி மாணவிகளுக்கும் நாளை 21ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.சுப்ரமணிய பாரதியார் பள்ளிக்கு மாற்று இடம் தேர்வு செய்து, மாணவிகள் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்யுமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.இரு பள்ளி மாணவிகளிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாற்று இடம்

பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவாகாமி கூறுகையில், ’22ம் தேதி காலாண்டு தேர்வு துவங்குகிறது. அதனால், இரு பள்ளி மாணவிகளுக்கும் வரும் 21ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதற்குள்ளாக சுப்ரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளுக்கு மாற்றும் இடம் தேர்வு செய்யப்படும்’ என்றார்.

மாற்று இடம்

பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவாகாமி கூறுகையில், ’22ம் தேதி காலாண்டு தேர்வு துவங்குகிறது. அதனால், இரு பள்ளி மாணவிகளுக்கும் வரும் 21ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக சுப்ரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளுக்கு மாற்றும் இடம் தேர்வு செய்யப்படும்’ என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.