உத்தர பிரதேசம் மாநிலம் சஹாரன்பூர் விளையாட்டு வளாகத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறை தரையில் வைக்கப்பட்டு உணவு வழங்கப்படும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில் கழிவறை தரையில் வைக்கப்பட்டு உணவு வழங்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இணையத்தில் பரவும் அந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் கழிப்பறை வளாகத்தின் தரையில் சமைத்த அரிசி சாதம் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தட்டு வைக்கப்பட்டிருப்பது காட்டப்படுகிறது. பின்னர் இந்த சமைத்த அரிசி சாதம் மூன்று நாட்களும் அங்கு வைத்துதான் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டியில் பங்கேற்ற சுமார் 200 வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வீடியோ வைரலாகப் பரவி சர்ச்சை எழுந்ததை அடுத்து சஹாரன்பூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அதிகாரியை உத்தரபிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அகிலேஷ் சிங் “வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பான முறைகேடு புகார்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்று கூறினார்.

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சஹாரன்பூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா, “மழை காரணமாக நீச்சல் குளத்தை ஒட்டிய உடை மாற்றும் அறையில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், விளையாட்டு வீராங்கனைகளுக்கு உடை மாற்றும் அறையில் உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.