Loading

இரண்டு தாதா குடும்பங்கள், அவர்களுடன் முறுக்கிக்கொண்டு திரியும் நாயகன், நடுவில் மாட்டிக்கொள்ளும் உடல்நலமில்லாத சிறுமி – இவர்களுக்கிடையே அரங்கேறும் அசுர ஆட்டம் ‘குருதி ஆட்டம்’.

கபடி விளையாட்டில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அதர்வா அணிக்கும், மதுரையையே ஆளும் ராதிகாவின் மகன் விளையாடும் அணிக்கும் முட்டல் மோதல். அதே அணியில் விளையாடும் ராதாரவியின் மகனுக்கும் அதர்வாவுடன் பகையுணர்வு. மற்றொருபுறம் கம்பவுண்டராகப் பணிபுரியும் அதர்வாவுக்கு பள்ளி ஆசிரியை பிரியாபவானி சங்கருடன் காதல்; அவரின் மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் சிகிச்சைக்கு வரும் ஒரு சிறுமியுடன் நட்பு. கபடி சண்டையால் உருவாகும் ஒரு சிறு தீப்பொறி, துரோகம், பழிவாங்கல், கொலை, ரவுடிகளுக்கு இடையேயான யுத்தம் என்பதாக மதுரை நகர் முழுவதும் குருதியை ஓடவிட்டால் அதுவே இந்தக் ‘குருதி ஆட்டம்’.

குருதி ஆட்டம் விமர்சனம்

துடிப்பான இளைஞனாக அதர்வா. மொத்தக் கதையையும் தூக்கிக்கொண்டு சுமக்கும் வழக்கமான நாயக பிம்ப பாத்திரமாக இல்லாமல் கதையின் நாயகனாக மட்டுமே அவர் வருவது சிறப்பு. அக்காவுடனான அவரின் பாசப் பிணைப்பிலும் யதார்த்தம். நடிகராகப் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சற்றே முன்னேற்றம் அடைந்திருக்கிறார். ராதிகாவுக்குப் பெரிய டான் கதாபாத்திரம். மதுரைத் தமிழில் கோபம் கொப்பளிக்கக் கட்டளையிடுவது, மிரட்டுவது, ஈவு இரக்கமில்லாமல் சுடுவது போன்றவை நம்பும்படி இருக்கின்றன. அவரையும் தாண்டி தான் வரும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்வது ராதாரவிதான். எல்லோருடனுமான அவரின் வசனங்கள் அட்டகாசம். சீரியஸான இடங்களிலும் நக்கல், நையாண்டி செய்து சிரிக்க வைக்கிறார்.

பிரியாபவானி சங்கருக்குக் கதையில் பெரிய வேலையில்லை. அவருக்கும் அவரின் அப்பாவுக்கும் இடையேயான அந்த க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் உணர்வுபூர்வமானதாக எழுதப்பட்டிருக்கிறது. கண்மணியாக வரும் சிறுமி அட்டகாசமாக நடித்திருக்கிறார். மிகை நடிப்பு சற்றே தட்டுப்பட்டாலும் கதைக்கு அத்தகைய மீட்டர் தேவைப்பட்டிருக்கிறது. வில்லனாக வரும் ‘எங்கேயும் எப்போதும்’ வத்சன் சக்ரவர்த்திக்குக் கிட்டத்தட்ட நாயகனுக்கு அடுத்து பலமானதொரு கதாபாத்திரம். உடலை ஏற்றி, மிரட்டல் கெட்டப்பில் உலா வருகிறார். ராதிகாவின் மகனாக வரும் கண்ணா ரவியின் கதாபாத்திரம் ஓர் இயல்பான மதுரைப் பையனை நினைவூட்டுகிறது. அவரும் அந்தப் பாத்திரத்தின் மாற்றங்களை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார்.

குருதி ஆட்டம் விமர்சனம்

`8 தோட்டாக்கள்’ ஸ்ரீ கணேஷ், மதுரையை மையமாக வைத்து குருதி கொப்பளிக்கும் நட்பு – துரோகம் பின்னணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் கதாபாத்திரங்கள், கதை அனைத்துமே ஒரு ஸ்க்ரிப்ட்டாக சுவாரஸ்யமாகத் தெரிந்தாலும் திரையில் அதைப் படமாக உருவாக்கிய விதத்தில் சறுக்கியிருக்கிறார்.

ஆரம்பக் காட்சிகளில் கதைக்களம் எதிர்பார்ப்பைக் கூட்டினாலும், இடைவேளைக்குப் பிறகு படம் பல இடங்களில் பாதை மாறித் தடம் புரண்டிருக்கிறது. குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளுக்கு இன்னமும் மெனக்கெட்டிருக்கலாம். பறந்து அடிப்பது, அதனால் எதேச்சையாக ஆயுதம் தாக்கி இறப்பது போன்றவற்றை இன்னும் சற்றே நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கலாம். என்னதான் பெரிய டான் என்றாலும் ராதிகா உட்கார்ந்தபடியே தன்னைத் தாக்க வருபவர்களை எல்லாம் போட்டுத் தள்ளுவது ‘காதுல பூ’ மெட்டீரியல்.

நிறையக் கதாபாத்திரங்கள் எப்படியும் கடைசியில் இறந்துவிடும், அல்லது சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்பதை எல்லாம் அட்வான்ஸாகவே யூகிக்க முடிகிறது. படத்தை எப்படி முடிப்பது என்பதிலிருக்கும் குழப்பம், ட்விஸ்ட்களுடன் அதை எங்கெங்கோ பயணிக்க வைத்து ஜவ்வாக இழுத்திருக்கிறது. அது அனைத்திலும் லாஜிக் என்ற விஷயத்தை வேறு தேட வேண்டியிருக்கிறது.

ஒரு ராவான கேங்ஸ்டர் துரோகக் கதையை பேப்பரில் ஸ்கெட்ச் போட்டுவிட்டு, திரையில் அதற்கு உயிர்கொடுக்கும்போது கமெர்ஷியல் ரூட்டே பிரதானம் என்று தடம் மாறியிருக்கிறது திரைக்கதை. இவை அனைத்தையும் விட, மதுரை என்றாலே ரவுடித்தனம், அருவா, துப்பாக்கி, கொலை என்று எடுக்கும் தமிழ் சினிமாவின் பாரம்பரியம் இதிலும் தொடர்கிறது. இடங்கள் தாண்டி மதுரையின் வாழ்வியலும் படத்தில் பெரிதாக வெளிப்படவே இல்லை. போதாக்குறைக்குத் தொடர்ந்து ஒருவரை ‘எதற்கும் ஆகாதவன்’, ‘சப்பை’ என்கிற ரீதியில் படத்திலிருக்கும் அனைவருமே டீல் செய்வது ஒரு கட்டத்தில் ஓவர்டோஸாக ஆகியிருக்கிறது.

குருதி ஆட்டம் விமர்சனம்

யுவன் ஷங்கர் ராஜா இசையில் அந்தோணி தாசன் பாடிய ‘ரங்க ராட்டினம்’ பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. பின்னணி இசையிலும் அந்தக் கபடிப் போட்டிகள் தாண்டி மற்ற காட்சிகளில் ஏமாற்றமே!

ஸ்டன்ட் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு, எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்குக் கொஞ்சமேனும் நம்பகத்தன்மையுடனும் காட்சிகளை எழுதியிருந்தால் ‘குருதி ஆட்டம்’ நம்மையும் பதைபதைக்க வைத்திருக்கும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *