கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. இந்த நிலையில், அண்டை நாடான இந்தியா பல விதங்களில் இலங்கை அரசுக்கும், இலங்கை மக்களுக்கும் உதவி வருகிறது.

தமிழகத்தை பொருத்தவரை இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் இலங்கை மக்களுடன் எப்போதும் ஒரு தனித்துவமான இணைப்பு உள்ளது. அந்த வகையில், தமிழகம் சார்பில் இலங்கையில் நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு உதவ பலவித முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வேண்டுகோளை அடுத்து, திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளத்தை இலங்கை நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ தாராளமாக பங்களிக்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை நிவாரண நிதிக்கு திமுக ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பங்களிக்குமாறு தமிழக மக்களிடம் தமிழக முதல்வர் செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கைக்கு அனுப்புவதற்கான பொருட்களையும், நிதியையும் சேகரிக்க மாநில அரசை அனுமதித்ததை அடுத்து, இந்த பணியில் ​​தமிழக அரசுக்கு மேலும் ஆதரவு கிடைத்துள்ளது.

முன்னதாக, இந்த வார துவக்கத்தில், எரிபொருள் வாங்க இலங்கைக்கு இந்தியா 200 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியா ஏற்கனவே 200 மில்லியன் டாலர் கூடுதல் கடன் வழங்கியுள்ளது என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜயசேகர் தெரிவித்தார்.

‘இந்த கடன் வசதி மே மாதம் நான்கு சரக்கு எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும்’ என இலங்கை அமைச்சர் கூறினார். இது தவிர 500 மில்லியன் டாலர் கடன் வசதி குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் இன்னும் அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *