தஞ்சாவூர்:

களிமேடு சப்பர தேர் விபத்தில் பொது மக்கள் மீது மின்சாரம் தாக்கிய போது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மின்வாரிய ஊழியர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு 200க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, சப்பர உலா நடைபெற்றது.ஊர்வலம் முடிந்து வளைவில் திரும்பும் போது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சப்பரம் உரசியதில் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 11 பேர் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குடியரசுத்தலைவர், பிரதமர் உள்பட பல அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி அறிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு கண்ணீரோடு கதறிய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவியும் அளித்தார்.

அலங்கரிக்கப்பட்ட சப்பரம் எப்படி தீ பிடித்தது என்று தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா கூறியுள்ளார். தேர் வளைவில் திரும்பும்போது தேரில் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது. அதை சரிசெய்யும்போது தேரின் உச்சி அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதால் தீ பிடித்தது. சப்பரத்தில் அமர்ந்து வந்தவர்கள் மீது ஷாக் அடித்தது பலர் தூக்கி வீசப்பட்டதாக கூறினார். சப்பரம் தீ பற்றி எரிவதைப் பார்த்து பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். நடந்து வருபவர்களுக்காக சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது அதிலும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது பல உயிர்கள் பறிபோகாமல் காப்பாற்றியுள்ளார் மின்வாரிய ஊழியர் திருஞானம்.

களிமேட்டை சேர்ந்த திருஞானம்,36 மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தேர் விபத்து நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தார். அப்போது பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடியவர் கீழே இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்வதை உணர்ந்தார். இருந்தாலும் தண்ணீரை மிதித்து சிலரை காப்பாற்றினார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

தனக்கு ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களை காப்பாற்ற முடிவு செய்து உடனடியாக தஞ்சையில் உள்ள உயர் மின்வாரிய அதிகாரிகளுக்கு போன் செய்து தகவல் கூறியதோடு சக ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தார். இதனையடுத்து நிலைமையை உணர்ந்து கொண்ட உயர் அதிகாரிகள் தஞ்சையில் இருந்தவாறே களிமேட்டுக்கு செல்லும் உயர்அழுத்த மின்பாதை இணைப்புக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர். இதன் மூலம் மேலும் மின்சாரம் பரவாமல் தடுக்கப்பட்டது. இதன் மூலம் திருஞானம் 200க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி உள்ளார். தற்போது அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது உயிரை துச்சமென மதிது காப்பாற்றிய திருஞானமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.

                                                                                                                                         -Jeyalakshmi C

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *