விருதுநகர்:
தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரைச் சிறப்புச் சார்பு காவல் ஆய்வாளர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து காவல்துறை சார்பாக ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் வாகன தணிக்கையும் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து சிறப்புச் சார்பு காவல் ஆய்வாளர் தர்மராஜ் வடக்கு ரத வீதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
வாக்குவாதம்
அப்போது மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் உணவுகள் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடும் வெங்கடேஷ் அங்கு 2 சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அங்குச் சோதனையில் ஈடுபட்ட போது ஆவணங்கள் சரியாக இல்லாததால் அவருக்கு 600 ரூபாய் அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இளைஞருக்கும் சிறப்புச் சார்பு காவல் ஆய்வாளருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வைரல் வீடியோ
அப்போது சிறப்புச் சார்பு காவல் ஆய்வாளர் தர்மராஜ் தோளின் மீது வெங்கடேஷ் கைவைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் பொது இடத்திலேயே வெங்கடேசை சரமாரியாகத் தாக்குகிறார். இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது வைரலாகி உள்ளது. போலீசாரின் இந்த செயலை இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
போலீசார் கூறுவது
இருப்பினும், அபராத தொகையைச் செலுத்த வீட்டில் இருந்து பணம் எடுத்து வருவதாக இளைஞர் கூறி சென்று விட்டு பின்னர் வந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி மூலம் சிறப்புச் சார்பு காவல் ஆய்வாளரை கொலை செய்ய முயன்றதாகவும் சுதாரித்துக்கொண்ட சிறப்புச் சார்பு காவல் ஆய்வாளர் தடுக்கவே அவரது சட்டையைக் கிழித்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
போலீசார்
ஆனால், இணையத்தில் பரவும் அந்த வீடியோவில் இளைஞருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அதன் காரணமாகவே போலீசார் வெங்கடேசை தாக்கியது தெரிய வருகிறது. மேலும், அந்த வீடியோவில் வெங்கடேஷை ஆய்வாளர் தர்மராஜ் கடுமையாகத் தாக்குகிறார். பின்னர், அருகிலிருந்த போலீசார் தலையிட்ட பிறகே, அடிப்பதை போலீசார் நிறுத்துகிறார்.
நீதிமன்ற காவல்
இது தொடர்பாகச் சிறப்புச் சார்பு காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர், இளைஞர் வெங்கடேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
+ There are no comments
Add yours