மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிரந்தரமாக சீரமைக்க ரூ. 6,229 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில்  வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் சாலைகள், மின்கம்பங்கள், கல்வி நிலையங்கள்  என பல கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.  இதனையடுத்து வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்துள்ள அனைத்து கட்டமைப்புகளையும் சரிசெய்ய, மத்திய அரசு உடனடியாக நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.12.2021) கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், மழையினால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை மதிப்பிட மத்தியக் குழுவினர் 21.11.2021 அன்று தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தற்காலிக சீரமைப்புப் பணிக்காக ரூ. 1,510.83 கோடியும்,  நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக ரூ.4,719.62 கோடியும் நிவாரணமாக வழங்கக்கோரி ஏற்கனவே நவ 16, நவ 25 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மழை வெள்ள பாதிப்பு அந்தச் சூழலை மேலும் கடுமையாக்கியுள்ளதாக  குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாநில பேரிடர் நிவாரண நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

எனவே, தமிழ்நாட்டில்  மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும், சேதமடைந்துள்ள உட்கட்டமைப்புகளை புனரமைக்கவும் ரூ.6,229 கோடி நிதியினை வழங்கிட உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு  பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *