திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா நள்ளிரவு 12 மணி சிறப்பு தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 31ம் தேதி திருப்படித் திருவிழா, ஜனவரி 1ல் ஆங்கில புத்தாண்டு விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்தியா, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது . அதன்படி டிசம்பர் 31 காலை வழக்கம் போல் திருப்படித் திருவிழா சரவண பொய்கை திருக்குளம் அருகில் முதல் படிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கும். அன்று காலை 11 மணிக்கு மலைக்கோயில் மாட வீதியில் உற்சவர் தங்கத்தேர் பவனி நடைபெறும் . ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பின் போது சுவாமி தரிசனம் செய்ய எராளமான பக்தர்கள் மலைக் கோயிலில் கூடுவார்கள் என்பதால், நள்ளிரவு பூஜைகளுக்கு தடை செய்து வழக்கம் போல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை திருக்கோயில் திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பக்தர்கள் அனைவரும் முக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்து முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக காய்ச்சல் பரிசோதனை மையங்கள், தற்காலிக மருத்துவ முகாம்கள், சிறப்பு பேருந்து வசதிகள், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்று அந்தந்த துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours