கரூர்:
கூடுதல் நாள்களாக பழைய முட்டைகளை வைத்திருந்த சத்துணவு மைய அமைப்பாளர் தேன்மொழி, சமையலர் லட்சுமி, இவற்றைக் கண்காணிக்கத் தவறிய பள்ளித் தலைமையாசிரியை தனலட்சுமி உள்ளிட்டோரை தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கெட்டுப்போன அழுகிய முட்டைகளைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவைத்திருந்ததாக எழுந்த புகாரையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுசெய்து, தலைமை ஆசிரியை, சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகனூரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர், சென்ற வாரம் பெறப்பட்ட சில முட்டைகளை ஒரு வாரத்துக்கு மேலாக காலம் கடந்தும் அப்புறப்படுத்தத் தவறியதால், சில முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கவிருந்ததாக, இது குறித்த வீடியோவை நேற்று சிலர் வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த நிலையில், நாகனூர் அரசு தொடக்கப் பள்ளியில் தரமில்லாத முட்டைகள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, உணவுப் பொருள்களின் தரத்தை ஆய்வுசெய்ததோடு, இருப்பிலுள்ள முட்டைகளின் தரத்தையும் ஆய்வுசெய்தார். ஆய்வின் முடிவில், கூடுதல் நாள்களாகப் பழைய முட்டைகளை வைத்திருந்த சத்துணவு மைய அமைப்பாளர் தேன்மொழி, சமையலர் லட்சுமி, இவற்றை கண்காணிக்கத் தவறிய பள்ளித் தலைமையாசிரியை தனலட்சுமி உள்ளிட்டோரை தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பிறகு, இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், “நாகனூர் அரசு ஆரம்பப் பள்ளியில் சத்துணவில் வழங்கப்பட்ட உணவுப்பொருள்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து உணவுப்பொருள்களின் தரமும் நல்ல நிலையில் உள்ளது. குறிப்பாக, முட்டைகள் தண்ணீரில் இட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் அனைத்து முட்டைகளும் தரமாக நல்ல நிலையில் உள்ளன. கடந்த வாரம் வழங்கப்பட்ட முட்டைகளை உரிய காலத்தில் அழிக்காமல் கெட்டுப்போன முட்டைகளை வைத்திருந்தது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையலர் லட்சுமி ஆகியோர் தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தப் பணிகளைக் கண்காணிக்கத் தவறிய பள்ளித் தலைமை ஆசிரியை தனலட்சுமியும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, இது போன்ற தவறுகள் வருங்காலங்களில் நடக்காமல் தவிர்க்க உரிய அறிவுரைகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்படும்” என்றார்.
+ There are no comments
Add yours