திண்டுக்கல்:
கொடைக்கானல் பாச்சலூர் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்; இப்படுகொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக்க கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஒன்றியம் பாச்சலூர் பகுதியில் வசித்து வரும் சத்யராஜ் அவர்களின் மகள் 9வயது சிறுமி பாச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவர் 16-12-2021 அன்று காலை 11 மணி அளவில் வகுப்பறையை விட்டு வெளியேறியவர் அதே பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் தீயில் கருகி மரணித்து உள்ளார்.
மாணவி மரணத்தில் சந்தேகம்
சிறுமியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது! பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளையும் உரிய வகையில் கண்காணிக்காமல் பொறுப்பற்று இருந்த ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
சிபிஐ விசாரிக்கட்டும்
இந்த மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசுபரிந்துரைப்பதோடு தொடர்ந்து சிறுமியினர் மரணம் அதிகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். நம்பி வரும் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பை அரசு பள்ளிகளால் தர முடியவில்லை என்றால், அதைவிட கொடுமை தவறுதல் எதுவும் இருக்க முடியாது. இந்ததவறான நிலையை போக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏன் நடவடிக்கை இல்லை?
பாச்சலூர் பள்ளிக்குழந்தை கொலை செய்யப்பட்டு முன்று நாட்களாகியும் காவல்துறை விசாரணையில் முன்னேற்றம் இல்லை. கடமைகளை நிறைவேற்றுவதில் காவல்துறை தவறுகிறது? என்ற சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது மக்கள் நீதியை பெறதெருவில் வந்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பெற்றோரை மிரட்டுவதா?
பாச்சலூரில் குழந்தையை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்காத காவல்துறையினர், குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பெற்றோரையும், பொதுமக்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது கண்டனத்துக்குரியது. பாச்சலூர் பள்ளி மாணவி, மர்மமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் விரைந்து கண்டறியப்பட்டு அவர்களுக்கு சட்டப்படி தண்டனையை பெற்றுத் தரகாவல்துறையும் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
+ There are no comments
Add yours