சென்னை:

சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனால் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் உள்ளது.

புகார் என்ன?

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு

விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டது. இந்த பதிவான முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

முன் ஜாமீன்

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தன் பெயரை தவறாக பயன்படுத்திய விஜய் நல்லதம்பி என்பவர்தான் குற்றவாளி என்றும் ,அவரை காவல்துறை பாதுகாக்கிறது என்றும், தனக்கு எந்த தொடர்பில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை வாதம்

காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கறிஞர், வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் பண மோசடி புகாரில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது . மேலும் விஜய்நல்லதம்பியையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

 

விசாரணை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதால், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தார். இதேபோல புகார்தாரர்கள் தரப்பிலும் ராஜேந்திரபாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார் முன்ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பளித்தார். அதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

-Shyamsundar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *