சென்னை :

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருக்கிணைப்பாளர் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அதிமுக அமைப்பு விதியில் திருத்தம்
மேற்கொள்ளப்பட்டது. இதுவரை இருவரும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையே இருந்து வந்தது

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி அம்மா டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள், கழகம் எனக்குப் பின்னாளும் 100 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து இருக்கும் என்று சூளுரைத்தார்கள்.  அவர்கள் வகித்த கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு மட்டுமே உரியது என்று, கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டோம்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மறைவிற்குப் பின், கழகத்தை வழிநடத்த 12.09.2017-ம் நாள் நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டத்தில், கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டு, கழகப் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புகளும், அதிகாரங்களும், கழக ஒருங்கிணைப்பாளருக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக இணைந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.

மேலும், கழக சட்ட திட்ட விதியினை திருத்தம் செய்ய, கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதன்படி, கழக சட்ட திட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில், விதி – 20 மற்றும் விதி – 43ம் திருத்தப்பட்டது.

இது தொடர்பாக, கழக அடிப்படை உறுப்பினர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து, கழக செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, கழக சட்ட திட்ட விதிகளில் பின்வரும் திருத்தங்கள் செய்ய முன்மொழியப்பட்டது:

1.    ””கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்படி, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள்”என்று கழக சட்ட திட்ட விதி 20(அ) பிரிவு -2 திருத்தி அமைக்கப்படுகிறது.

2.    கழக சட்ட திட்ட விதி-43, பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக திருத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது:- ””ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள
கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல.’’

3.    கழக சட்ட திட்ட விதி – 45, பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக திருத்தப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது. ””ஆனால், இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும், விலக்கு அளிப்பதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை.’’

மேலும், இந்தத் திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும், இன்றைக்குப் பிறகு கூட்டப்படும் கழகப் பொதுக்குழுவின் அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதென்றும் இந்தச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *